கேரள மாநிலத்தின் மருத்துவக்கழிவுகள், அந்த மாநிலத்தின் எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்படுவது ஒரு கவலைக்குரிய நிலைமையாக மாறியுள்ளது. சமீபத்தில், நெல்லை மாவட்டம் கோடகநல்லூர் மற்றும் நடுக்கல்லூர் பகுதிகளில், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் காணப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு பல அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கேரள வழக்கு நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மருத்துவ கழிவுகள் தொடர்பான விவகாரத்தை தமிழக அரசு வக்கீல் முன்வைத்தார். இதுகுறித்து விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் உறுப்பினர் சத்யகோபால், கேரள மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் வீணாகக் கொட்டப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

