பாரம்பரிய உடையில் மாரத்தான் ஓடிய தமிழக தம்பதியினர்.

அரபு நாடுகள் இந்தியா உலகம் கலை / கலாச்சாரம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு புலம் பெயர்ந்த தமிழர்கள் மண்மணம்

அபுதாபியில் தொடர் ஓட்ட போட்டி மாரத்தான், கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள பிரபலமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நீண்ட தொலைவு ஓட்டப்போட்டியில் அமீரகத்தில் வாழும் தமிழ்நாட்டின் நாகர்கோவிலை சேர்ந்த லிடியா ஸ்டாலின் மற்றும் விபின் தாஸ் தம்பதியினர் தமிழர்களின் பாரம்பரிய உடையில் உற்சாகமாக பங்கேற்று ஓடினர். மாரத்தான் ஓட்டத்தில் பொதுவாக, டிசர்ட் மற்றும் கால்சட்டை அணிந்து ஓடுவது வழக்கம். ஆனால் இந்த ஜோடி சாதாரண தடகள வீரர்களின் உடைகளை தவிர்த்து, தமிழகத்தின் பாரம்பரிய உடைகளான வேட்டி-சட்டை மற்றும் பாவாடை-தாவணி அணிந்து ஓடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். மொத்தம் 42.2 கிலோ மீட்டர் தொலைவைக் பாரம்பரிய உடையில் 4 மணி நேரத்தில் முடித்து சாதனை படைத்தனர். முடிவில், நிறுவனத்தின் சார்பில் தம்பதியினருக்கு பதக்கம் மற்றும் பரிசு வழங்கி கவுரவித்தனர். செய்தி நிருபரிடம் கருத்து தெரிவித்த தம்பதியினர், “தற்காலத்தில் இத்தகைய போட்டிகளில் பொதுவாக பங்கேற்பவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறந்து மேற்கத்திய கலாசாரத்திற்கேற்ப உடைகள் அணிந்து வருகின்றனர். எனவே, நமது தமிழக பாரம்பரியத்தை முன்னிறுத்தும் வகையில், நீண்ட தொலைவானாலும், நமது பாரம்பரிய உடையை அணிந்து ஓடினோம்” எனக் கூறினார். இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *