தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, நெல் கொள்முதல் விதிகளில் தளர்வுகள் தேவை – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் விவசாயம்

காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள், பருவம் தவறி பெய்த மழையால், நீரில் மூழ்கி ஏற்பட்ட பாதிப்புகளால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் சில தளர்வுகளை வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தில் 16.43 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவு, சம்பா/ நவரை பயிரின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், துரதிஷ்டவசமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால், சுமார் ஒரு இலட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, அறுவடைப் பணியை மீண்டும் தொடங்கிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக உள்ளது. கடந்த காலங்களில், நெல் கொள்முதலில் ஈரப்பதம் குறித்த விதிமுறைகளைத் தளர்த்த ஒன்றிய அரசு அனுமதி அளித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், தற்போதைய சூழ்நிலையில், கொள்முதல் ஈரப்பதத்தில் அதே தளர்வு தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3% லிருந்து 5% வரை தளர்த்தவும், சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5%லிருந்து 7% வரை தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முதல்வர், பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *