இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களில் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதற்கான தகவலின் அடிப்படையில், முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று ஜனவரி 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பிப்ரவரி 13ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. இதற்குப் பிறகு, 2வது பகுதி கூட்டத்தொடர் மார்ச் 10ம் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 4ம் தேதி முடிவடையும். இதனை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று உரையாற்ற உள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை கூடத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி உரையின் பிறகு, மூன்று நாட்கள் விவாதம் நடைபெறும், அவை பிப்ரவரி 3, 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்காக, அவையின் ஒரு உறுப்பினர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்வைப்பார், அதை மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கான சூழ்நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கான ஆலோசனைகள் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

