செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் உலகளாவிய அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. இந்தத் துறையில் அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக ஓபன் ஏஐ (சாட்ஜிபிடி) மற்றும் கூகுள் (ஜெமினி), முன்னணி இடத்தில் உள்ளன. இந்நிலையில், சீனா தனது டீப்சீக் மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப வல்லுனர்கள், சீனாவின் டீப்சீக், அமெரிக்காவின் சாட்ஜிபிடி மற்றும் கூகுளுக்கு எதிரான கடுமையான போட்டியாக மாறும் என எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், இந்தியா தனக்கே உரித்தான ஏ.ஐ. மாடல்களை உருவாக்குவதில் முன்னேற்றம் காண்கிறது என்று மத்திய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிரதமர் மோடி இந்தியாவின் முதல் ஏ.ஐ. மாடல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். ஒப்புதல் அளித்த முதல் நான்கு மாதத்திலேயே அதற்கான கட்டமைப்பின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்கு அடிப்படையாகக் கருதப்படும் “Common Compute Facility” (அனைத்து நிறுவனங்கள் மற்றும் நிர்வாகங்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் மாடல்) உருவாக்கப்பட்டுள்ளது. “Common Compute Facility” இன் அடிப்படையில் 10,000 GPUs இலக்காகக் குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது 18,693 GPUs பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பணி சிறப்பாக நடைபெறுகிறது .மேலும் வளர்ந்து வரும் நிறுவனங்கள், 10 முக்கிய மென்பொருள் நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. எதிர்வரும் 8 முதல் 10 மாதங்களில் இந்த செயற்கை நுண்ணறிவு மாடல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தனித்துவமான மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் இந்த செயற்கை நுண்ணறிவு மாடல் உருவாக்கப்படும் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

