ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த வீடியோ

அமெரிக்கா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், டிரோன் மூலம் ஏமன் மீது தாக்குதல் நடத்தி ஒரு குழுவினர் கொல்லப்படும் வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் குழுவாக சுற்றி நிற்கும் மக்கள் மீது டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டு அவர்கள் கொல்லப்படுவதும் பின்னர் அப்பகுதி முழுவதும் புகை பரவியதும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஹவுதி படையினர் எனக் கூறிய அதிபர் டிரம்ப் அவர்கள் தாக்குதலுக்கான கட்டளைகளுக்காக அங்கு கூடியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் அடையாளம் காண முடியாத நிலையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக இஸ்ரேலின் வர்த்தக மற்றும் ராணுவக் கப்பல்களின் மீது ஹவுதி படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அமெரிக்கா ஏமன் மீதான அதன் தாக்குதலை அதிகரித்துள்ளது. மேலும், கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஏராளமான ஏமன் மக்கள் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப்படை குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *