திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆந்திர தலைமை வன காவலர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளார்களுக்கு பேட்டி அளித்த ஆந்திர மாநில தலைமை வன காவலர் மதுசூதன் ரெட்டி, ” லக்ஷிதா என்ற ஆறு வயது சிறுமி பெற்றோருடன் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை புலி தாக்கி மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தேவஸ்தானத்தின் நிதி உதவியுடன் நடைபாதை அருகில் உள்ள பகுதிகளில் 500 ட்ராப் கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டு 300 கேமராக்கள் இதுவரை பொருத்தப்பட்டுள்ளன. தானியங்கி முறையில் செயல்படும் இந்த கேமராக்கள் மூலம் சிறுத்தை புலி, கரடி ஆகியவை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அந்த பகுதியில் இருக்கிறதா என்று உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் இதுவரை ஐந்து சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று அடைத்து வைத்திருக்கிறோம்.
நடைபாதையின் இரு புறங்களிலும் 20 அடி தொலைவுக்கு புதர்களை அகற்றி வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பின் அதை பக்தர்கள் எளிதில் அடையாளம் காண வழிவகை செய்திருக்கிறோம். இது தவிர விரைவில் நடைபாதையில் இருபுறங்களிலும் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் ராட்சத விளக்குகளை பொருத்த திட்டம் இடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக வனத்துறை ஊழியர்கள் 100 அடிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மதியம் 2 மணி வரை மட்டுமே 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருடன் வரும் பக்தர்கள் நடந்து மலையேற செல்ல அனுமதி அளிக்கப்படும்.மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே திருப்பதி திருமலை இடையே மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் பேருந்துகள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே பயணிக்கலாம். வனவிலங்குகளின் தொல்லை இனிமேல் இருக்காது என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் மட்டுமே தற்போது கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் ” என்று கூறினார்.

