தமிழகத்தில் ஆட்சி அமைந்தால் பெண்கள் நலனுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்துவோம் என்று விஜய் அறிவித்துள்ளார். சென்னை நகரில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தவெக தலைவர் விஜய் பல தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, தவெக அரசு அமைந்தால் 60 வயது வரை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் நலனுக்காக தனி இலாகா உருவாக்கப்பட்டு, அது நேரடியாக தனது கட்டுப்பாட்டில் செயல்படும் என்றும் அவர் கூறினார். தற்போது அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 ஆக உள்ள நிலையில், அதை உயர்த்தி ரூ.2,500 வழங்குவது பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.இதற்கு கூடுதலாக பெண்கள் மற்றும் குடும்ப நலனை முன்னிட்டு பல திட்டங்களையும் விஜய் அறிவித்தார். ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் தரமான பட்டு சேலை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டமும் அறிமுகப்படுத்தப்படும். மேலும், குழந்தைகள் பள்ளி கல்வியை இடைநிற்றல் இல்லாமல் தொடர ஊக்குவிக்க ‘காமராஜர் கல்வி உறுதி’ திட்டத்தின் கீழ் பெற்றோருக்கு ரூ.15,000 உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ‘ராணி வேலுநாச்சியார் படை’ அமைக்கப்படும்; பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரிக்க ‘அஞ்சலையம்மாள் விரைவு நீதிமன்றங்கள்’ தொடங்கப்படும். அதேபோல், அரசுப் போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு முழுமையான இலவசப் பயணம் வழங்கப்படும் என்றும், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக எச்சரிக்கை பொத்தான்கள் பொருத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் வரவேற்பு கிட் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த அறிவிப்புகள் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பெண்கள் மற்றும் குடும்பங்களை இலக்காகக் கொண்ட முக்கிய வாக்குறுதிகளாக பார்க்கப்படுகின்றன.

