புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரிக்க சென்ற மாவட்ட ஆட்சியரிடம், தங்களை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்று பட்டியலின மக்களில் சிலர் முறையிட்டனர். இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் அழைத்து சென்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.
அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
அந்த நீர்த்தேக்க தொட்டியை திங்கட்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.
அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பரிசோதனை செய்தபோது, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக வெள்ளனூர் போலீசில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.