யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், சென்னையை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்- ஏ, குரூப்- பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களை நிரப்புவதற்கும் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
அதில் மொத்தம் 933 பேர் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்து சாதனை படைத்துள்ளனர். இஷிதா கிஷோர் என்பவர் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இதே போல் கரிமா லோகியா இரண்டாம் இடத்தையும், உமா ஹராதி என்ற பெண் மூன்றாமிடத்தையும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 39 பேர் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சென்னையை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் 107வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் ராமகிருஷ்ண சாமி என்ற தேர்வர் 117ஆவது இடத்தையும், மதிவதினி ராவணன் என்ற பெண் 447வது இடத்தையும் பிடித்துள்ளார்.
“முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பத்திரிகையாளராக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற ஆர்வமாக உள்ளேன். எனது பெற்றோர்கள் உறுதுணையாக இருந்ததால், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முடிந்தது” என்று தெரிவித்தார். ஜீஜீயின் தந்தை எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.