நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை உருவாக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் கடந்த 4-ம் தேதி தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தது.
4-ம் தேதி முதல் இன்று வரை உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்டம் மீதான விவாதம் நடந்தது. அதன் முடிவில், இன்று அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பொது சிவில் சட்ட மசோதாவின் பிரிவு 4 (1)-ல் பலதார மணம் அனுமதிக்கப்படவில்லை. யாரைத் திருமணம் செய்யலாம் என்ற வரைமுறையையும், திருமணத்தின்போதும், மறு மணத்தின்போதும், வாழ்க்கைத் துணை இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் சட்டம் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், பிரிவு 4 (3)-ல் பெண்களின் திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கு 21 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்துப் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஸ்கர் சிங் தாமி, “திருமணம், பராமரிப்பு, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்களில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சம உரிமையை பொது சிவில் சட்டம் வழங்கும்.
முக்கியமாகப் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்கவும், பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் தவறான செயல்களை ஒழிப்பதற்கும் உதவும். ‘மாத்ரிசக்தி’க்கு எதிரான அட்டூழியங்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிரான பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும். மக்கள்தொகையில் பாதி இருக்கும் பெண்கள் சம உரிமைகளைப் பெற வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

