ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்திருந்தார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக 35 பந்துகளில் சதம் விளாசி சாதனைப் படைத்து அனைவரையும் ஆச்சர்யபடுத்தினார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் பீகார் சென்றிருந்த பிரதமர் மோடியை, சூர்யவன்ஷி தனது குடும்பத்துடன் சந்தித்தார். அவர்கள் சந்தித்தது தொடர்பான புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், “பாட்னா விமான நிலையத்தில், இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் நாடு முழுவதும் போற்றப்படுகின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்” என தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

