சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி பி. சுசீலா பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
88 வயதாகும் பின்னணி பாடகியான பி.சுசீலா பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
தேனைப் போன்ற குரலைக்கொண்ட பி.சுசீலா, முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பல முன்னணி நடிகைகளுக்கும் தனது இனிமையான குரலின் மூலம் பாடல்கள் பாடியுள்ளார். ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் இடம் பெற்ற “பால் போலவே” என்ற பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றார் பி.சுசீலா. சிறந்த பின்னணி பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமையை பெற்றவர் இவர்.
சென்னை ஆழ்வார்பேட்டை ஆனந்தா சாலையில் உள்ள இல்லத்தில் பி சுசீலா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ள பி.சுசீலா தனக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் தன்னை அக்கறையுடன் கவனித்து கொண்ட செவிலியர்களுக்கும்வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் ,மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்ட செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் காட்டிய பாசத்திற்கும் அக்கறைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் நலம் பெற பிரார்த்தனை செய்த கோடான கோடி அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.” என கூறியுள்ளார்.

