யூட்யூபர் TTFவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்; அதிவேகமாக பைக் ஓட்டி சாலை விபத்துக்குள்ளானதால் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விபத்துகள்

அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, அதனை தனது சமூகவலைதளமான யூடியூபில் பதிவேற்றம் செய்து பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவரது சாகசங்களைப் பார்த்து இளைஞர் சிறுவர் என பாகுபாடு இல்லாமல் இவருக்கு ரசிகர்களாக உள்ளனர். மேலும் அதிவேகமாக பைக் ஓட்டுவதால் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதனிடையே சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில், போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார் வாசன். இந்த நிலையில், ‘மஞ்சள் வீரன்’ என்கிற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டிடிஎஃப் வாசன் சென்னையில் இருந்து – மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவருடன் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒருவரையொருவர் முந்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்டும், அதிவேகமாக வாகனத்தை இயக்கி, ஸ்டண்ட் என்று சொல்லக் கூடிய பைக் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார் வாசன்.மேலும் வரும் வழிகளில் தனது ரசிகர்களுக்கு, தான் வரும் இடங்கள் குறித்தும் சமூகவளைதளங்களில் பதிவிட்டு தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே இளைஞர்கள் குழுமியிருக்கின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில், வாசன் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது, பைக்கின் பின்புறமானது சாலையில் தேய்ந்து நிலை தடுமாறியதில் அவரது இருசக்கர வாகனம் இரண்டு மூன்று முறை பல்ட்டி அடித்து தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் வாசனுக்கு காயம் ஏற்பட்டு காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் வாசன் மீது பாலுச்செட்டிசத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.வழக்கு பதியப்பட்ட பிறகு, சென்னையில் உள்ள நண்பர் அபீஸ் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று விடியற்காலையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் அவரை போலீசார் டிடிஎஃப் வாசனை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *