தென் கொரியாவில் செயல்பட்டு வரும் கொரியா தமிழ்ச் சங்கம், இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த “இந்தியா தின” விழாவில் கலந்து கொண்டு தமிழர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது. இந்த நிகழ்ச்சி தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள யோயிடோ பூங்காவில் மே 16, 2026 அன்று நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த விழாவில் இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் தங்கள் மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரிய உடைகள், உணவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினர். இதில் தென் மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணைந்து பங்கேற்றன. தமிழர்களின் அடையாளங்களான திருவள்ளுவர் சிலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர் வடிவங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. மேலும், தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்த கொரிய மக்கள் ஆர்வமுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
கொரியா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நாட்டுப்புற நடனங்கள் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.மேலும், கொரியா மொழியில் தமிழர் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் கவிதைகளும் நிகழ்ச்சியில் இடம் பெற்றன. இது இந்தியா மற்றும் கொரியா நாடுகளுக்கிடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.இந்த நிகழ்ச்சியை கொரியா தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் அரவிந்த்ராஜா செல்வராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இந்திய தூதரக அதிகாரிகளும் கலைஞர்களின் திறமையை பாராட்டினர்.“வேற்றுமையில் ஒற்றுமை” என்ற இந்தியாவின் பண்பாட்டு சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.











