உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீதம் மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், அதிகபட்சமாக 3.31 லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கின்றனர், அதனை தொடர்ந்து 2.77 லட்சம் சீன மாணவர்கள் உள்ளனர். மேலும், 43,149 தென்கொரிய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். கனடா, வியட்நாம், தைவான், சவுதி அரேபியா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் அமெரிக்காவில் கணிசமாக உள்ளனர்.அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக, அந்த நாட்டின் அரசு எப் 1 விசாவை வழங்குகிறது. இந்த விசாவை பெற, இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஆண்டு மட்டும் 41 சதவீத மாணவர் விசா விண்ணப்பங்கள் அமெரிக்க தூதரகங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டில், 6.79 லட்சம் வெளிநாட்டு மாணவ, மாணவியர்கள் எப் 1 விசா பெறுவதற்காக உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களில் விண்ணப்பித்தனர், இதில் 4.01 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன, ஆனால் 2.79 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.கடந்த 10 ஆண்டுகளில் இது அதிகமாக உள்ளது. குறிப்பாக, இந்திய மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் எப்1 விசாக்களின் எண்ணிக்கை சுமார் 38 சதவீதம் வரை குறைந்துள்ளது.

