திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் பி ஆர் நாயுடு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரியும் அறங்காவலர் குழுவின் செயலாளருமான சியாமளா ராவ் தேவஸ்தான நிர்வாகத்தின் 2025- 26 நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அறங்காவலர் குழு முன் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நீண்ட ஆலோசனைக்கு பின் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சமர்ப்பித்த 5 ஆயிரத்து 258 கோடியே 68 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்ட 2025 -26 நிதியாண்டிற்கான தேவஸ்தானத்தின் வரவு செலவு திட்டத்திற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்தது.
தேவஸ்தான அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டு ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் 1729 கோடி ரூபாயும், தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் வைத்திருக்கும் நிரந்தர வைப்பு நிதிகளுக்கு வட்டியாக 1310 கோடி ரூபாயும், பிரசாத விற்பனை மூலம் 600 கோடி ரூபாயும், தரிசன டிக்கட்டுகள் விற்பனை மூலம் 310 கோடி ரூபாயும் வருமானமாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஊழியர்களின் ஊதியத்திற்கு 2025- 26 நிதியாண்டில் 1773 கோடியே 75 லட்ச ரூபாயும், பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்ய 768 கோடியே 50 லட்சம் ரூபாயும், முதலீட்டு செலவுகளுக்காக 800 கோடி செலவு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

