திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திறக்கப்பட்ட சொர்க்கவாசல் வழியாக கடந்த 9 நாட்களில் சுமார் 7.9 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், மொத்தம் 10 நாட்கள் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முதல் 3 நாட்களில் ஆன்லைன் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலவச தரிசன வரிசை மற்றும் ரூ.300 சிறப்பு டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் வழங்கப்பட்டது. இன்று இரவு 12.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில், அதன்பிறகு ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் சொர்க்கவாசல் கதவை மூடுவார்கள்.இதனிடையே, நேர ஒதுக்கீட்டுக்கான சர்வ தரிசன டோக்கன்கள் இன்று மதியம் 12 மணி முதல் திருப்பதியில் உள்ள அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், னிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில் மீண்டும் வழங்கப்பட தொடங்கியது. இந்த டோக்கன் பெற்ற பக்தர்கள் நாளை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கடந்த 9 நாட்களில் 7,09,831 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ள நிலையில், 2,00,613 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.36.86 கோடி காணிக்கை வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இன்று நிறைவு நாளையொட்டி, சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

