டில்லியில் பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்திக்கிறார்; வெள்ள நிவாரணத் தொகை குறித்து ஆலோசனை நடத்த திட்டம்

அரசியல் இந்தியா இயற்கை பேரிடர் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வானிலை

மழை வெள்ள நிவாரணம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி வீசிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
‘மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 16ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் டெல்லியில் பிரதமர் மோடியை நாளை இரவு 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துகிறார்.
தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பிரதமரிடம் விளக்குகிறார். தென் மாவட்டங்களில் மீட்பு நிவாரணப் பணிகள் பற்றி எடுத்துக் கூறியும் பிரதமருடன் ஆலோசிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *