உலக சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் மிகப்பெரிய விழாவாக நடத்தபட்டு, தகுதியான படங்களை தேர்வு செய்து அதற்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய ‘To Kill a Tiger’ திரைப்படம் ‘சிறந்த ஆவணப்படம்’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படம் ஜார்கண்ட்டைச் சேர்ந்த இந்திய விவசாயி தன் வாழ்கையில் சந்திக்கும் பிரச்னைகளையும், கொடூரமான கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தனது 13 வயது மகளுக்கு நீதி கேட்டுப் போராடும் அவரது போராட்டத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டது. ஏற்கெனவே பல விருதுகளை வென்ற இந்த ஆவணப்படம் ஆஸ்கரை வெல்லுமா என்று ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான 96-வது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெற உள்ளது. இந்த ஆஸ்கர் விருது விழாவிற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற ’ஓபன்ஹைமர், பார்பி’ உள்ளிட்ட திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

