ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் வரும் ஜூன் ஒன்றாம் தேதி, நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு சாதகமான சூழல் வந்தால், பிரதமர் யார் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி தனித்து தேர்தலை சந்தித்த மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நாளில் கூட்டம் நடைபெறுவதால், தான் அங்கு செல்ல முடியாது என கூறியுள்ளார். மேலும், ரிமல் புயலால், மேற்கு வங்கத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அதற்கான மீட்பு நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்பதை விட, புயல் பாதிப்புகளை சீர் செய்வதற்குத் தான் முன்னுரிமை அளிக்க முடியும் எனவும் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

