இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 19-ம் தேதி சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகியது, இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சிரமத்தில் இருந்தது. கேப்டன் ரோகித் ஷர்மா, கில், கோலி, பந்த், ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அந்த கடினமான சூழ்நிலையில், அஸ்வின் மற்றும் ஜடேஜா இணைந்து 199 ரன்கள் சேர்த்தனர்.அஸ்வினின் அபார சதம் மூலம் இந்திய அணி 376 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பலமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 227 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ஆட்டமிழக்க ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அசத்தலான சதங்களை அடித்ததால், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழந்து 287 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை டிக்லர் செய்தது . இதன் மூலம், 515 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழல் பந்து வீச்சால் சிக்கிய வங்கதேச அணி 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன் மூலம், இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவிற்கு அற்புதமாக பந்துவீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார், இது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் 37-வது முறையாகப் காப்பாற்றுகிறார். இதன் மூலம், ஷேன் வார்னேவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இத்தொடரின் ஆட்ட நாயகன் விருது அஷ்வின் க்கு வழங்கப்பட்டது.

