இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மிகுந்த பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளும் இலங்கை, தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது, இந்நிலையில் இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டது என தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்குகள் எண்ணும் பணி நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கியது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக முதல் சுற்று முடிவில் முன்னணி வகித்தார். அதன் பிறகு, அடுத்தடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன மாறி மாறி முன்னணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசா இருந்தனர். இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை இன்று (செப்.22) பகலில் நடைபெற்றது. இதில், அநுரகுமார திஸ்ஸநாயக 56 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம், முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாசாவை விட 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குகளை அவர் பெற்றுள்ளார். இதையடுத்து, அநுரகுமார திஸ்ஸநாயக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய அதிபராக அநுரகுமார திஸாநாயக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து வரும் திங்கள்கிழமை (செப்.23) எளிமையான முறையில் பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும், அநுரகுமார திஸ்ஸநாயக இலங்கை அதிபராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
