ஜனவரி 14-ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு தற்போது ஜனவரி 16-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு, 2025-ம் ஆண்டில் ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியா (அய்.சி.ஏ.அய்.) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில், அந்த நாளில் சி.ஏ. தேர்வை நடத்துவது, தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.இதற்குப் பிறகு பொங்கல் பண்டிகை நாளில் சி.ஏ. தேர்வுகளை ஒன்றிய அரசு அறிவித்ததற்கு மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் பிறர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கான பதிலில், ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகள் மொழி பிரச்சினையை பிரச்சாரமாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும், தேர்வு ஆணையத்தின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்றும் கூறினார். இதற்கிடையில், எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், ஜனவரி 14-ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு, தற்போது ஜனவரி 16-ம் தேதி நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.

