வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, பல மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் அதிக கனமழை பற்றிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2024 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.27.11.2024 அன்று கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சில இடங்களில் 20 செ.மீட்டருக்கும் மேலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 22.11.2024 மற்றும் 25.11.2024 ஆகிய தேதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்க மீன்வளத் துறை இயக்குநருக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்ட கலெக்டர்களுக்கு 23.11.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டு, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1,192 படகுகள் கரைக்கு திரும்பியுள்ளன. மேலும், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற படகுகள் அருகிலுள்ள துறைமுகங்களுக்கு செல்ல, நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள, திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 6 குழுக்கள், சென்னை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதற்குப் பிறகு, தேவைக்கேற்ப, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 குழுக்களும் தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளன. அவசரகால செயல்பாட்டு மையங்கள் மூலம் நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. கனமழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில், பொதுமக்கள் TN Alert செயலியை பயன்படுத்தி தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

