திபெத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான நிலநடுக்கம் 126 உயிர்களை பறித்துள்ளது. இதற்கிடையில் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் பிஹார் மாநிலங்களில் கூட உணரப்பட்டது.சீனாவின் திபெத் பகுதியில், நேபாள எல்லைக்கு அருகில், நேற்று காலை 6.35 மணிக்கு ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், திபெத்தின் மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையமாக இருந்தது. திபெத் மற்றும் நேபாள நாடுகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்த தகவலின்படி, இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் திபெத்தின் ஜிசாங் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதால், அங்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் கடும் பயத்தில் உள்ளனர், மேலும் கட்டிடங்கள் குலுங்கியதால், அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.நிலநடுக்கம் காரணமாக திபெத்தின் ஷிகாட்சே நகரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிந்து விழுந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகம் , நிலநடுக்கத்தின் காரணமாக திபெத்தில் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

