தமிழகத்தின் முக்கியமான வேளாண் உற்பத்தி பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தனித்துவமான முறையில் உருவாக்கப்படும் சிறப்பு பொருட்களை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது. இதன் மூலம், புவிசார் பெற்ற பொருட்களை அனுமதி இல்லாமல் வியாபார லாபத்திற்காக அல்லது போலியாகப் பயன்படுத்துவதைத் தடுக்க புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. முதல்முறையாக, கும்பகோணம் வெற்றிலை என்ற விவசாய பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடிச் சேலை, காஞ்சிபுரம் பட்டுச்சேலை, மதுரை மல்லிகை, தஞ்சை கலைத்தட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு போன்ற பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.அதற்கேற்ப, சமீபத்தில் மதுரை மரிக்கொழுந்து மற்றும் விளாச்சேரி களிமண்ட பொம்மைகள் புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை மாணிக்க மாலைகளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம், புவிசார் குறியீடு பெற்ற விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் மற்றும் தயாரிக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும், மேலும் இப்பொருட்கள் உலகளவில் சந்தைப்படுத்தப்படவும் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

