உச்சநீதிமன்றம், மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட பிராண்ட் பெயரை பரிந்துரைக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை நியாயமற்ற முறையில் சந்தைப்படுத்துவதை தடுக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் வழக்கறிஞர், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்கி, அதிக அளவிலான அல்லது பொருத்தமற்ற மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றன எனக் கூறினார். அதிக விலை கொண்ட முன்னணி நிறுவனங்களின் மருந்துகளை வாங்குவதற்கான அழுத்தம், சாதாரண மக்களுக்கு மருத்துவ செலவுகளை அதிகரிக்கிறது என்று அவர் கூறினார். எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதற்கான ஊக்குவிப்பு, அந்த மருந்தை சார்ந்த கட்டாயத்திற்கு தள்ளுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்திய மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நேரடி வரிக்கான ஒன்றிய வாரிய அறிக்கையின்படி, டோலோ 650 மாத்திரை உற்பத்தியாளர்கள், மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இலவசங்களை வழங்குவதாக சுட்டி காட்டினார். நீதிபதிகள் அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, ராஜஸ்தானில் ஒவ்வொரு மருத்துவ நிபுணரும் ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்ற நிர்வாக உத்தி நடைமுறையில் உள்ளதாக தெரிவித்தனர். எந்த நிறுவனத்தின் பெயரில் உள்ள மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியாது எனவும், ஜெனரிக் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்றும், எந்த பிராண்ட் பெயரையும் பரிந்துரைக்க கூடாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த உத்தி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால், இது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

