அமெரிக்க அதிபர் டிரம்ப், வெளிநாட்டு மக்களின் அமெரிக்கா குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தேச பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி 12 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், மியான்மர் , சாட், காங்கோ, இகுவடோரியல் கினியா, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 12 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்காவிற்குள் வர அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்த தடை உத்தரவு வருகிற ஜூன் 9-ந்தேதி முதல் அமலுக்கு வரும், இதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை கட்டுப்படுத்தும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

