தமிழ்நாடு அரசு, கடலோர சூழலியல் பாதுகாப்பில் புதிய படியை எடுத்து, மாநிலத்தின் முதல் அலையாத்திக் காடுகள் மாநாட்டை செப்டம்பர் 23, 2025 அன்று மகாபலிபுரத்தில் நடத்தியது. அலையாத்தி காடுகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. இதை பாதுகாக்க வேண்டியது அவசியம். கடந்த நான்கு ஆண்டுகளில் 2400 ஹெக்டேர் பரப்பில் புதிய நடவு மற்றும் 1200 ஹெக்டேர் பரப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், அலையாத்திக் காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளது. எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்குப் பிந்தைய மீட்டுருவாக்கம், பறவைகள் வருகையும் கடலோரப் பாதுகாப்பும் மேம்படச் செய்துள்ளது. மாநாட்டில் மத்திய, மாநில அதிகாரிகள், சுற்றுச்சூழல் நிபுணர்கள், சமூகத் தலைவர்கள் பங்கேற்று, அலையாத்திக் காடுகளின் எதிர்கால சவால்கள் குறித்து கலந்துரையாடினர். கடந்த 2021ல், 11,119 ஏக்கராக இருந்த அலையாத்தி காடுகளின் பரப்பளவு, தற்போது, 22,239 ஏக்கராக அதிகரித்துள்ளது. அதாவது, நான்கு ஆண்டுகளில், அலையாத்தி காடுகளின் பரப்பளவு, இரு மடங்காக உயர்ந்துள்ளது.

