அமெரிக்கா விதித்த வரிகளின் எதிரொலியாக, பிற நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளதாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை, இந்திய கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.42,866 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.6% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், ஜவுளி ஏற்றுமதி 1.23%, ஆபரண ஏற்றுமதி 1.24% உயர்ந்துள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), வியட்நாம், பெல்ஜியம், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு இந்திய ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.வர்த்தக நிபுணர்கள் தெரிவித்ததாவது, அமெரிக்க வரி கொள்கைகள் மற்றும் உலக சந்தை மாற்றங்கள் காரணமாக இந்தியா தனது ஏற்றுமதி திசையை விரிவாக்கி வருவதாக கூறுகின்றனர். குறிப்பாக ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இந்திய தயாரிப்புகளுக்கு நல்ல தேவை உருவாகியுள்ளது.மேலும், மின்சாதனங்கள், மருந்துகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் விவசாய பொருட்கள் போன்ற துறைகளிலும் ஏற்றுமதி வளர்ச்சி பதிவாகியுள்ளது. அரசு, ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் வரி சலுகைகள் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) அதிகளவில் ஆதரித்து வருகிறது.வர்த்தக அமைச்சகத்தின் மதிப்பீட்டுப்படி, 2025 இறுதிக்குள் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி $900 பில்லியன் டாலரை எட்டும் வாய்ப்பு உள்ளது. இது இந்தியாவை உலகளவில் முன்னணி ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக நிலைநிறுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

