வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் எண்ணெய் வளங்கள் அனைத்தும் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த டிரம்ப், வெனிசுலாவில் உடனடியாக முதலீடு செய்யுமாறு உத்தரவிட்டார்.அவர் பேசுகையில், “நாங்கள் தலையிடவில்லை என்றால் இந்த வளங்களை ரஷ்யா அல்லது சீனா கைப்பற்றியிருக்கும். இப்போது அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது” என்று தெரிவித்தார். இனிமேல் வெனிசுலா நிர்வாகத்துடன் பேச வேண்டாம், நேரடியாக அமெரிக்காவுடன் பேச வேண்டும் என்றும், 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஆனால், எக்ஸான் மொபில் நிறுவனம் தற்போதைய சூழலில் முதலீடு கடினம் என தெரிவித்தது.இதற்கிடையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருந்த போரை தானே தடுத்து நிறுத்தியதாகவும், அதன் மூலம் ஒரு கோடி உயிர்களை காப்பாற்றியதாகவும் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்திருந்தாலும், இந்தியா இதைத் தெளிவாக மறுத்துள்ளது. மேலும், இதுவரை 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அதற்காக நோபல் அமைதி பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கூறியது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

