சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவலாளிகளில் யார் அதிகம் அடித்தார்கள் என்று வேறுபாடு காட்ட இயலாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முழு விசாரணையும் முடிந்து கடந்த மாதம் 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.
அவர்களுக்கான தண்டனை விவரம் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், தண்டனை குறித்து சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு தங்களது நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இந்த வழக்கு கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய, மாநில அரசுகள் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கோரின.
இதனால் இந்த வழக்கை ஏப்ரல் 2ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவலர்கள் ஒன்பது பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் இவர்களுக்கு எவ்வளவு தண்டனை வழங்கலாம் என்ற பரிந்துரையை மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 9 பேரிடமும் தனித்தனியாக அவர்களது கருத்தை நீதிபதி கேட்டறிந்தார். அப்போது குற்றவாளிகள் ஒன்பது பேரும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் தாக்கவில்லை. எதிர்பாராத விதமாக நடந்த உயிரிழப்பு. எங்கள் குடும்ப நலன், பெற்றோர் நலன் கருதி குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி ஒவ்வொருவரின் குடும்பச்சூழல், குடும்பச்சொத்து, அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியம், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை தனித்தனியாக கேட்டு பதிவு செய்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் ஒன்பது பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் தனித்தனியாக வாதிட்டனர். இது அரிதினும் அரிதான வழக்கு இல்லை. தூக்கு தண்டனை என்பது தீர்வாகாது. அவர்கள் திருந்தி வாழ வேண்டும் என்ற வகையில் தான் தண்டனை இருக்க வேண்டும். ஒருவன் திருந்தவே மாட்டான். இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியே இல்லாதவன் என்ற முடிவுக்கு வரும்போதுதான் தூக்கு தண்டனை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். எனவே தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் விஜயன் வாதிடுகையில், இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நேரடி கண்ணுற்ற சாட்சிகள் உட்பட பல்வேறு அறிவியல் பூர்வமான சாட்சிகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பாவிகளை காவல் நிலையத்தில் வைத்து தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தியதால் ஒட்டுமொத்த சமுதாயமே அதிர்ச்சியடைந்துள்ளது என்றும் சுட்டிக் காட்டினார்.
இதைத்தொடர்ந்து, உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி நீதிபதி முன் ஆஜராகி கண்ணீர் மல்க முறையீடு செய்தார். எந்த தப்பும் செய்யாத தனது கணவரையும், மகனையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்து விட்டார்கள். தனது கணவர் மற்றும் மகன் மீது இதற்கு முன் எந்த ஒரு சிறு வழக்கு கூட கிடையாது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. எனவே உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க முறையீடு செய்தார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கின் தண்டனை விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, தந்தை மற்றும் மகன் இருவர் மீது பொய் வழக்கு பதிந்துள்ளனர். இது தெரியாமல் நடந்த தவறு அல்ல. குற்றவாளிகள் அனைவரும் நன்கு படித்தவர்கள், அரசு பணியில் உள்ளவர்கள். வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது. தந்தை முன் மகனையும் மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம்போன போக்கில் தாக்கி உள்ளனர். ஆயுள் தண்டனை வழங்கினால் போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

