தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டர் தூரத்திற்குள் செயல்பட்டு வரும் 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தற்போது மாநிலம் முழுவதும் 4,765 மதுபான கடைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள கடைகளை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அந்த ஆய்வின் அடிப்படையில், வழிபாட்டுத் தலங்கள் அருகே 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 255 கடைகள் என மொத்தம் 717 மதுக்கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மக்கள் நலனை முன்னிட்டு இந்த அனைத்து கடைகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதற்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 500 மதுக்கடைகள் தமிழக அரசால் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *