எபோலா பாதிப்பு: காங்கோவுக்கு இந்தியா மருத்துவ உதவி அனுப்பியதுஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள காங்கோ நாட்டுக்கு இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை அனுப்பியுள்ளது.காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால், உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. கடந்த 2018 முதல் 2020 வரை காங்கோவில் ஏற்பட்ட எபோலா பரவலில் சுமார் 2,300 பேர் உயிரிழந்தனர்.தற்போது ‘பண்டிபுக்யோ’ எனப்படும் அரிய வகை எபோலா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. மேலும் கடுமையான குருதிப்போக்கு காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டதால், உலக நாடுகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன.இந்த சூழ்நிலையில், எபோலா பாதிப்பால் அவதிப்படும் காங்கோ நாட்டிற்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை இந்தியா அனுப்பியுள்ளது.இதுகுறித்து ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (ஆப்பிரிக்கா சிடிசி) வெளியிட்ட தகவலில், இந்தியா அனுப்பிய மருத்துவ உதவிகள் உகாண்டாவில் உள்ள மருத்துவ மையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அவை விரைவில் காங்கோவின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்த இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் ஆப்பிரிக்கா சிடிசி நன்றி தெரிவித்துள்ளது.

