திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் 8 நாட்களில் 29 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
வருடாந்திர பிரமோற்சவ திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
நாள்தோறும் காலை மற்றும் இரவில் வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரமோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த 8 நாட்களாக நடந்த வருடாந்திர பிரமோற்சவத்தில் 28 கோடியே 94 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். 5 லட்சத்து 76 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 33 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. பிரமோற்சவத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் சுமார் 21.8 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதத் துறையின் மூலம் உணவு மற்றும் சிற்றுண்டிகள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

