10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் நடத்தும் பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இது போன்ற பாராட்டு விழா நடத்தி வரும் நடிகர் விஜய், கட்சி தொடங்கிய பிறகு நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
மாஸாக எண்ட்ரி கொடுத்த விஜய், அரங்கம் அதிர சிங்க நடை போட்டு மேடைக்கு வந்தார். பிறகு அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு மாணவர்களுக்கு நடுவில் அமர்ந்து அவர்களுடன் உரையாடினார். தொடர்ந்து மேடையில் பேசிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், முதலில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்.
மேலும், மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட அட்வைஸ்களை அள்ளி தெளித்த அவர், உங்களுக்கு அட்வைஸ் பிடிக்காது என்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன் என கூறினார். மாணவர்களின் கெரியரை தொடர்ந்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்பது அவசியம் என வலியுறுத்தினார். அரசியல் ரீதியாக மட்டும் சொல்லல. அரசியலும் ஒரு கெரியரா வரவேண்டும் என்பது தான் எனது விருப்பம் என தெரிவித்துள்ளார். பிறகு மாணவர்களிடம் நல்ல படிச்சவங்க தலைவர்களா வரணுமா வேண்டாமா என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. ஒரு அரசியல் கட்சி தலைவராக எனக்கும் அச்சமாக தான் இருக்கு. அரசியல் கட்சிகள் தான் காரணம் என்று சொல்ல வரல. இளைஞர்களை காப்பாற்ற வேண்டியது ஒரு அரசோட கடமை. அதை ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க என்று சொல்லி, அதை பற்றி இங்கே பேச வரல, அதற்கான மேடையும் இது இல்ல என கூறி தட்டி மளுப்பிவிட்டார். மேலும் சில நேரங்களில் அரசாங்கத்தை விட நம்ம வாழ்க்கையை நம்ம தான் பாத்துக்கனும் என வலியுறுத்தினார்.
தவறான பழக்கத்தில் எப்போதும் ஈடுபடாதீர்கள், உங்கள் நண்பர்கள் அப்படி இருந்தால் முடிந்தளவிற்கு திருத்த பாருங்கள் என அட்வைஸ் கொடுத்தார். பிறகு say no to temporary pleasures, Say no to drugs என அனைத்து மாணவர்களையும் 2 முறை உறுதி மொழி ஏற்க வைத்தார். இதை கடைபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன் என கூறிவிட்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க தொடங்கினார்.

