தருமபுரி அருகே பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90 கோடிக்கான காசோலை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். மாதத்திற்கு ஒரு முறை இந்த கோயிலின் உண்டியலை திறப்பது வழக்கம்.அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கண்ணன் தலைமையிலான குழுவினர் இன்று காலை கோயில் உண்டியலை முறைப்படி திறந்தனர்.
அப்போது அந்த உண்டியலில் காசோலை ஒன்று இருந்ததை கண்டு எடுத்தனர். அதில் ரூ.90 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரத்து 256 ரூபாய் இருந்ததை கண்டு அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.
இந்த காசோலைக்கான கணக்கு தருமபுரி சவுத் இந்தியன் வங்கியில் உள்ளதா என்றும் அந்த கணக்கில் பணம் உள்ளதா என்பது குறித்தும் சவுத் இந்தியன் வங்கியில் அறநிலை துறை அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையான காசோலையா அல்லது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக போடப்பட்ட காசோலையா என தெரியவரும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.