மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லத்தில் வசித்து வந்தார். அவர், இருக்கும் வரை அவருடன் சசிகலாவும் உடன் இருந்து வந்தார். ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலா சிறைக்கு செல்லும் வரை இந்த இல்லத்தில் தான் வசித்து வந்தார். சசிகலா சிறை சென்ற நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி வேதா இல்லம் ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா வசம் சென்றது.
இதனால், சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்தார். அதேவேளையில், போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு நேர்எதிரே சசிகலா புதிய வீடு ஒன்றை கட்டி “ஜெயலலிதா இல்லம்” என பெயர் வைத்தார். இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. இதில் கலந்த கொள்ள முடியாத சூழலில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சசிகலாவின் வீட்டுக்கு சென்றார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி புதிய வீட்டில் சசிகலா குடியேறியதை தொடர்ந்து, ரஜினிகாந்த் நேரில் சென்று சந்தித்தார். அத்துடன், புதிய இல்லத்தை சுற்றி பார்வையிட்டார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சசிகலாவின் வீடு கோயில் போன்று உள்ளதாக கூறினார். மேலும், சசிகலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

