அமெரிக்கா மற்றும் இரான் இடையே சனிக்கிழமை நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகள் எந்த உடன்பாடும் இல்லாமல் முடிந்தன. இருந்தாலும், இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரான் அரசு ஊடகமான IRIB வெளியிட்ட தகவலின்படி, சில விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அமெரிக்காவின் அதிக தலையீடு காரணமாக இறுதியில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. குறிப்பாக இரண்டு அல்லது மூன்று முக்கிய அம்சங்களில் இரு தரப்பினரின் நிலைப்பாடுகள் மிகவும் வேறுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத் நகரில் பல மணி நேரம் நீடித்தன. அந்த நேரத்தில் அமெரிக்க குழு, டொனால்ட் ட்ரம்ப் உடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக அமெரிக்க துணை அதிபர் J. D. வான்ஸ் அறிவித்த பிறகு, அரபு மற்றும் மேற்கத்திய ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகள் வெளியாகி வருகின்றன.அரபு ஊடகங்கள், குறிப்பாக ஆல் ஜசீராவின், இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் ராஜதந்திர முயற்சிகள் முற்றிலும் முடிந்துவிடவில்லை என்று கூறுகின்றன. இன்னும் ஒரு ஒப்பந்த முன்மொழிவு பரிசீலனையில் இருக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், ஆல் அரேபியா வெளியிட்ட செய்தியில், ஒரே அமர்வில் உடன்பாடு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என இரான் தரப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இன்னும் திறந்திருப்பதாகவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் ராணுவக் கப்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேற்கத்திய ஊடகங்கள் இந்த சந்திப்பை முக்கியமான ராஜதந்திர முயற்சியாக பார்க்கின்றன. CNN, பல தசாப்தங்களுக்கு பிறகு அமெரிக்கா-இரான் இடையே நேரடி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது மிகப் பெரிய மாற்றம் என தெரிவித்துள்ளது.நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை, உடனடி முடிவு எதுவும் எட்டப்படாவிட்டாலும், இந்த நேரடி பேச்சுவார்த்தை தானே ஒரு முக்கிய முன்னேற்றம் என மதிப்பிட்டுள்ளன. மொத்தத்தில், உடன்பாடு எட்டப்படாதபோதும், இந்த பேச்சுவார்த்தை எதிர்கால அமைதி முயற்சிகளுக்கான ஒரு முக்கிய தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. அடுத்து இரு தரப்பும் எவ்வாறு நகர்கின்றன என்பதே உலக நாடுகளின் கவனமாக உள்ளது.

