மாணவர்களுக்காக நடிகர் விஜய் நடத்த உள்ள நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ப்ளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் வரும் வெள்ளிக்கிழமையன்று பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்குகிறார். அப்போது தலா ஒவ்வொரு மாணவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனுமதி சீட்டு வழங்கப்படுபவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும், சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் செல்போன், பேப்பர் பேனாவிற்கு அரங்கில் அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவ, மாணவிகள் ஓய்வெடுப்பதற்காக திருமண மண்டபங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வெளியூர்களில் இருந்து வருவோர் மேல்மருவத்தூர் வழியாக மதுராந்தகம் வந்து, OMR அக்கரை வழியாக மண்டபத்திற்கு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

