டி20 உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. ‘சூப்பர் 8’ சுற்றின் கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி. வெற்றியை தொடர்ந்து, முதல் அரையிறுதி போட்டி வரும் 27ம் தேதி காலை தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி. மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடவுள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் தங்களது செயல்பாடு குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறுகையில்; எங்களுக்கு அரையிறுதியில் விளையாடுவது என்பது கனவு போன்றது.இந்த தொடரை நாங்கள் தொடங்கிய விதம் தான் இது அனைத்துக்கும் காரணம். நியூஸிலாந்தை நாங்கள் வீழ்த்திய போது எங்களுக்கு இந்த நம்பிக்கை கிடைத்தது. இது குறித்து விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த சாதனையை எண்ணி எங்கள் நாட்டு மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியில் இருப்பார்கள். நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறுவோம் என தெரிவித்த ஒரே நபர் பிரையன் லாரா மட்டும்தான். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு உங்கள் சொல்லை நாங்கள் நிச்சயம் காப்போம் என உறுதி அளித்திருந்தேன். அதனால் எங்கள் அணியை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டியில் 130 முதல் 135 ரன்கள் எடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். அதை காட்டிலும் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாகவே எடுத்திருந்தோம். எப்படியும் அவர்கள் அடித்து ஆட வேண்டும். இலக்கை 12 ஓவர்களில் கடந்து, அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென முயற்சிப்பார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஒரு வகையில் அது எங்களுக்கு சாதகமாகவும் அமைந்தது. நல்ல லைன் மற்றும் லெந்த்தில் பந்து வீச வேண்டுமென திட்டமிட்டோம். எங்களது திறன் மீது 100 சதவீதம் நம்பிக்கை வைத்தோம்.டி20 கிரிக்கெட்டில் எங்களது பலமே பந்து வீச்சு தான் என நம்புகிறேன். அதே நேரத்தில் எங்களது பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தில் சிறந்த தொடக்கத்தை அளித்து வருகின்றனர். அது அணியின் பந்து வீச்சுக்கு மேலும் பலம் கூட்டுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த தொடரில் எங்கள் அணியின் செயல்பாடு அற்புதமாக இருந்தது. இது எங்களுக்கு பெரிய சாதனை தான். இப்போது அரையிறுதியில் விளையாடுகிறோம். இதில் எங்களது திட்டங்கள் சிம்பிள் வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.