சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், செவ்வாய்க்கிழமை மாலை பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரைக் பூமிக்கு திரும்ப அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. அந்த விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்ககள் பயணித்தனர். மேலும் மார்ச் 17ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் பூமி திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தில் சுனிதா மற்றும் வில்மோர் உட்பட மேலும் இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பவுள்ளனர். மார்ச் 18ஆம் தேதி மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் டிராகன் விண்கலம் வந்து சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலத்தின் வெளியேற்றம் மற்றும் பூமிக்கு வருகை ஆகிய நிகழ்வுகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என் நாசா அறிவித்துள்ளது.

