ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கி போர் நடைபெற்று வருகின்றது. இரு நாடுகளும் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை தாக்குதலில் அழித்ததாக கூறப்படுகிறது.சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உக்ரைன் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. இந்த போர் நிறுத்தத்திற்கான திட்டத்தை ரஷ்யா கொள்கை அடிப்படையில் ஆதரித்தது. இருப்பினும், இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன என ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டார். ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் சந்தித்தார். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் கலந்துரையாடி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.போர்நிறுத்தத்திற்கான அமெரிக்காவின் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சனிக்கிழமையிலும் வான்வழி தாக்குதல்கள் தொடர்ந்தன. உக்ரைன் விமானப் படையின் தகவலின்படி, ரஷியா 178 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் 2 ஏவுகணைகளை ஏவியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் வோல்கோகிராட் பிராந்தியத்தில் விழுந்த உக்ரைன் ஏவிய ட்ரோன் பாகங்களால் ‘லுகோயில்’ எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்துக்கு அருகே தீவிபத்து ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியதிலிருந்து, வோல்கோகிராட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உக்ரைன் படைகளால் பல முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

