தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 360 கி.மீ தொலைவில் உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நாளை (அக்.17) கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட ரெட் அலர்ட் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் வட உள் தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது, மேலும் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் காணப்படும். தென்தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தென்மேற்கு மற்றும் அதனைச் சுற்றிய மேற்கு மத்திய வங்கக் கடலில் கடல் சீற்றம் மற்றும் மிகுந்த கொந்தளிப்பு நிலவுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையோரங்களில் நாளை மதியம் வரை இவ்வாரான நிலை காணப்படும். பின்னர், கடல் சீற்றம் படிப்படியாக குறையும். தென்மேற்கு மற்றும் அதனைச் சுற்றிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நாளை வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றுஇந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
