ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் 13-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் ரெய் ஹிகுச்சியிடம் இந்திய வீரர் அமன் ஷெராவத் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸ் உடன் அமன் ஷெராவத் மோதினார். போட்டி தொடங்கிய முதல் ஒரு நிமிடத்துக்குள்ளாகவே ஆதிக்கம் காட்டிய டேரியனுக்கு ஒரு புள்ளி கிடைத்தது. ஆனால் அடுத்த ஒரு சில நொடிகளிலேயே அமனின் கை ஓங்கியது.
அடுத்தடுத்து புள்ளிகளை அதிகரித்து அதிரடி காட்டிய அமன், முதல் பாதி முடிவில் ஆறுக்கு மூன்று என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் மூக்கில் ரத்தம் வழிய களமிறங்கிய அமன், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை ஏற்றினார்.
ஆறு நிமிட முடிவில் 13-5 என்ற கணக்கில் டேரியன் டாய் க்ரூஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார் அமன் ஷெராவத். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு இது நான்காவது வெண்கலம் ஆகும்.