விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூவரை வென்றான் பகுதியில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டும் பணியின் போது, பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை தொல்லியல் துறையினா் மூன்றாம் தேதி மேற்கொண்டனர். 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில், குடைவரை முறையில் கட்டப்பட்டு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் குளம் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை நடைபெற்ற குளம் வெட்டும் பணியின் போது, 2 அடி ஆழத்தில் மண் பானை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து கோயில் தொல்லியல் பாதுகாப்பாளா் ராம்விக்னேஷ் தொல்லியல் துறைக்கு தகவல் வழங்கினார். இதனை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை கோயில் மலை அடிவாரத்தில் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், விருதுநகர் மாவட்ட தொல்லியல் அலுவலர் சண்முகவள்ளி, தொல்லியல் துறை காப்பாளர் பால்துறை, வருவாய்க் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு ஒரு அறிக்கை வழங்கி, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் ஆய்வு செய்யப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். மேலும், குளம் தோண்டும் போது கிடைத்த மண் குடுவை, மண் பானை, இரும்பு தாதுக்கள் உள்ளிட்ட பொருட்களை வருவாய்த் துறையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். மலைக்கொழுந்தீஸ்வரா் கோயிலின் சுற்றுப்புறத்தில் முதுமக்கள் தாழி மற்றும் பழங்கால மண்பாண்ட பொருட்கள் அதிகமாகக் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைப்பதற்கான பணியில் தோண்டிய போது, பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவை தொல்லியல் துறையினரால் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. தற்போது, மண்பாண்டங்கள் பெருமளவில் கிடைத்துள்ளது, மேலும் , மண்ணில் புதைந்த நிலையில் பல பானைகள் தென்படுகின்றன. எனவே, இந்த பகுதியில் தொல்லியல் துறையினரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என பொது மக்கள் கூறிவருகின்றனர்.