ரஷ்யாவின் யாக்கூட்டியா பகுதியில் புதன்கிழமை அதிகாலை வானத்தில் ஒரு விண்கல் சீறி பாய்ந்தது, இதனால் வானத்தில் பிரகாசமான ஒளிச்சுடர் உருவானது. இந்த காட்சியை ரஷ்யாவில் பலர் தங்கள் மொபைல் மற்றும் கமெராவில் பதிவு செய்துள்ளனர். ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இந்த விண்கல் சுமார் 70 செ.மீ. விட்டம் கொண்டதாக இருந்தது. இது 2022 WJ, 2023 CX1 மற்றும் 2024 BX1 போன்ற பிற விண்கற்களைப் போலவே ஒரு விண்கல்லாகக் கருதப்படுகிறது. விண்கல்லின் வீடியோக்களில், அது மேல் வானத்தில் இருந்து பறந்து வந்து மின்னல் போல மாயமாவதை காணலாம். யாக்கூட்டியாவின் அவசர நிலை அமைச்சகம் அனைத்து அதிகாரிகளையும் விழிப்புடன் வைத்திருந்ததாகவும், விண்கல்லின் விழுதுகள் யாருக்கும் சேதமின்றி கரடுமுரடான காட்டுப் பகுதியில் வீழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) வெளியிட்ட தகவலின் அடிப்படையில், இந்த விண்கல் பூமியில் விழுவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பே கண்டறியப்பட்டது. இதன் அகலம் 70 செ.மீ. எனக் கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.15 மணிக்கு, இது பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. நுழைந்தபோது, விண்கல் பல துண்டுகளாக வெடித்துப் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசித்திரமான நிகழ்வு ரஷ்யாவின் யாக்கூட்டியாவில் மக்கள் மற்றும் விஞ்ஞானிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.