தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி உலகிற்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கடந்த 3 ஆண்டுகளாக அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு 1039வது சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.m
நவம்பர் 9-ம் தேதி காலை மங்கல இசையுடன் தொடங்கிய சதய விழாவில் திருமுறை பாடல் கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கியமாக மாலை நிகழ்ச்சியில் தஞ்சை பெரிய கோவில் வளாகம் முழுவதும் பழங்கால இசை கருவிகளோடு நாட்டிய கலைஞர்கள் பங்கு பெற்ற மாமன்னன் “ராஜராஜ சோழன் விஜயம்” நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 700க்கும் மேற்பட்ட நாட்டிய மாணவிகள் பங்கேற்றனர்.
இரண்டாம் நாள் சதய விழாவை முன்னிட்டு அரசு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் யானை மீது திருமுறை வீதி உலா நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஓதுவார்கள் தமிழில் திருமுறைகள் பாட, 4 முக்கிய ராஜ வீதிகளில் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பெருவுடையாருக்கு பேராபிஷேகம் நடைபெற்றது.
இதில் முக்கியமாக 1039 நடன கலைஞர்கள், கரகாட்டம்,தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்,என பல்வேறு நடன கலைகளை நிகழ்த்தி ராஜராஜ சோழனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். இந்த ஒரு நிகழ்வை ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நடந்ததைப் போல சித்தரித்து அற்புதமாக நேரலை நாடக நிகழ்வாக நிகழ்த்தி அசத்தினர்.