அனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள பாகுபலி சீரிஸ் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாகுபலி. பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்து வசூலில் மெகா வெற்றியைப் பதிவு செய்து ரூ.1,000 கோடி வசூலைத் தாண்டியது. ஹாலிவுட்டுக்கு நிகராக இந்தியாவில் எடுக்கப்பட்ட இதன் இரண்டு பாகங்களும் ஒரு இதிகாச காவியமாக ரசிகர்களை கவர்ந்தது. இந்த திரைப்படம் வெளிவந்து பல வருடங்கள் கடந்த நிலையில், தற்போது அனிமேஷன் வடிவில் உருவாக்கப்பட்டு பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த மே 17 ஆம் தேதி தெலுங்கில் இதன் அனிமேஷன் தொடர் வெளிவந்தது. இந்நிலையில் இந்த தொடர் தற்போது தமிழிலும் வெளிவந்துள்ளது. இதனை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.